Wednesday, April 29, 2015

நாற்பது வரை நான்

எனக்கு இன்றுடன் 40 வருடங்கள் முடிவடைந்து நாளை (30.04.15) முதல் எனது வயது நாற்பது ஆகிறது. இதுவரையும் என்னை உருவாக்கி, உருப்படுத்தி,  பத்திரமாக பாதுகாத்து வந்த என் தேவாதி தேவனுக்கு மகிமையும் துதியும் நன்றியும் செலுத்துகிறேன்.

இந்த நாற்பது வருடங்களிலும் உலகப்பிரகாரமாக என்னை பெற்றெடுத்து வளர்த்து உருவாக்கிய என் பெற்றோர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த நாள்வரையிலும் தேவனுடைய கிருபையினால் அவர்கள் இருவரும் நலமுடன் இருக்க அருள் செய்யும் தேவாதிதேவனுக்கு மீண்டும் துதிகளைச் செலுத்துகிறேன்.

எனக்கு நாற்பது வயதா? என்னால் நம்பமுடியவில்லை.  ஏன் ? எனது பிறந்த நாள் எதுவென்று யாருக்கும் தெரியாத காரணத்தினாலா? மீசையைத் தவிர மற்றபடி இளமையாகத் தானே இருக்கிறேன் என்ற சுய உணர்விலா? அல்லது வயதாகி விட்டதை ஏற்றுக் கொள்ளமுடியாத பக்குவமா? நானறியேன்...

இந்த கட்டத்தில் எனது எண்ண அலைகள் என்ன? எவைகளை பதிவிட விரும்புகிறேன்? எனக்கே தெளிவில்லை. இருப்பினும் நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாதிருப்பதும் கர்த்தருடைய சுத்த கிருபையே.  அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை என்ற வசனமே தெளிவாக எண்ணத்தில் வட்டமிடுகிறது.

எத்தனையோ தருணங்களில் எதிபாரா விபத்து சூழ்நிலைகளில் இருந்து தப்புவிக்கப் பட்ட நினைவுகள்; தேவனது பார்வையில் நான் உயிரோடிருக்க தகுதியில்லாத நிலைகளிலும் என்னை தமது சுத்தகிருபையால் தனது மகனாக தக்கவைத்திருக்கும் அன்பினை எண்ணி அவருக்கு ஆனந்த துதி பலிகள் ஏறெடுக்கிறேன்.





Thursday, March 19, 2015

நினைவுகளின் எல்லை


நானெல்லாம் 5 வயதாக இருக்கும் போது

நானெல்லாம் உன்னைப் போன்று 5 வயதாக இருக்கும் போது என என் கதையை ஆரம்பித்தேன் என் மகனிடம். அப்படியென்ன 5 வயதில் நடந்தது?

பிறந்த குழந்தைகளெல்லாம் ஒரு வயதில் எழுந்து நின்று நடக்க ஆரம்பிக்கும். நானோ ஐந்து வயது வரையும் அதைத்தான் செய்து கொண்டிருந்தேனாம். ஐந்து வயது முடிந்து பள்ளிக்கு செல்லும் பருவத்தில் தான் ஒழுங்காக நடக்க ஆரம்பித்திருக்கிறேன். எனவே பேதுரு என்னும் பெயருடைய என்னை பேத்தை என்று சிறுவயதில் என்னை வட்டப்பெயருடன் அழைப்பதுண்டு.

நான் ஏன் ஐந்து வயது வரை நடக்கவில்லை? நான் இப்போது மருத்துவரென்பதால், எனது சிந்தனைகள் அவ்விதம் ஓடும். ஆனால், அவ்வித சிந்தனைகள் எனது பெற்றோர்களுக்கு வந்திருக்க வாய்ப்பு கொஞ்சம் குறைவு. அன்றாடம் காய்ச்சிகளான அவர்களுக்கு ஏழாவதாகவோ எட்டாவதாகவோ பிறந்த என்னைப் பற்றி அவ்வளவு தூரம் யோசிக்க நான் என்ன செல்லப்பிள்ளையா? அன்றாடம் உழைத்து சம்பாதித்து தான் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய நிலையில் உழைத்த அவர்களுக்கு என்னைமட்டும் பற்றி கவலைப்பட நேரமெல்லாம் இருந்திருக்காது.

பின்னாட்களில் பிழைத்துக் கொண்ட ஐந்து பிள்ளைகளில் நான் ஐந்தாவது, அதாவது கடைசி என்பதால், என்மீது கொஞ்சம் அதிக பாசம் உண்டு என்பது எனது கணிப்பு. இருப்பினும் நான் எனது ஐந்து பிள்ளைகளையும் சமமாகவே நேசிக்கிறேன் என எனது அப்பா அவ்வப்போது சொல்வதுண்டு. ஆனாலும் காலஞ்சென்ற எனது நான்காவது அண்ணன் மேத்யூ மீது எனது அம்மாவிற்கு கொஞ்சம் அதிக பாசம் உண்டு என்பதும் எனது கணிப்பு.

ஐந்துவயது வரை பேத்தையாக இருந்த நான் ஒரு மெத்தப் படித்தவனாக வருவேன் என யாரும் நினைத்திருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் ‘தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே, என்னை அறிந்து அழைத்த தேவன்’ அவரது திட்டங்கள் எனது வாழ்க்கையில் உரித்த நேரங்களில் நிறைவேறிட தவறவில்லை. எனவே தான், அதற்கு நன்றிக்கடனாக, அவரது திட்டங்களை திடமாய் அறிந்து அவைகளை நிறைவேற்றிட நானும் முனைகிறேன். 

ஆரம்ப வரிகள்

வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளை நினைத்துப் பார்ப்பது ஒரு சுவையான அனுபவம். அவைகளிலிருந்து வரும் நாட்களை வரைமுறைப்படுத்தும் பாடங்கள் கிடைப்பது மட்டுமல்ல, மனதில் இருக்கும் சிந்தனைகளை எழுத்துவடிவில் கொட்டி இறக்கி விடுவதால், தொடர்ந்து முன்னேறிச்செல்ல ஊக்கமும் உத்வேகமும் பிறக்கிறது. இவைகளை வாசிக்கும் தங்களுக்கும் சிலபல சிந்தனைச் செறிவுகள் வெளிப்படக்கூடும்.

இன்று 19.03.2015 ல் எங்கள் மகன் ஸ்டீவ் ஹட்ஸன் United Indian School, Kuwait-ல் தனது முதல் வகுப்பை பூர்த்தி செய்து இரண்டாம் வகுப்பிற்கான Promotion Card-ஐ வாங்கி, பின்னர் இரண்டாம் வகுப்பிற்கான Tution fees கட்டி, அதற்கான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வாங்கிக் கொண்டு வந்தோம். வீட்டுக்கு வந்த அவனுக்கு, ’இன்னும் டை மற்றும் ஷூ சாக்ஸ் இவைகளை வாங்கவில்லையே’ என்ற வருத்தத்தில் ’இப்பொழுதே அவைகள் வேண்டுமென’ அடம்பிடித்தான். எவ்வளவோ சொல்லியும் அடங்கவில்லை.

தனது பணிக்குச் செல்ல நேரமாகிவிட்ட படியால், எனது மனைவி சென்றுவிட, நான் மட்டும் ’அவனை உரிய நேரத்தில் கிடைக்கும் கவலைப்படாதே’ என கூறி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன்...அமைதியாவதாக இல்லை. ஒன்றுமல்ல... எல்லாம் ஒரு அடம் தான். ஒருகட்டத்தில், ’நானெல்லாம் உன்னைப் போன்று 5 வயதாக இருக்கும் போது’.... என்று ஆரம்பித்து ஒருசில சுவாரசியமான மற்றும் உணர்ச்சிகரமான எனது கடந்துவந்த பாதைகளை திரும்பிப் பார்த்து நினைவுகூர்ந்த போது... அவனுக்குப் புரிந்ததோ என்னவோ, ஆனால் அமைதியாகிவிட்டான்.

தொடர்ந்து அவன் தனது வழக்கமான பொழுதுபோக்கு காரியங்களை (இங்கு வேறு என்ன... TV, அதிலும் அவனுக்குரிய சானல் மற்றும் Tab ) தொடர, நான் மட்டும் அப்படியே, தலைசாய்ந்து சற்று நேரம் அயர்ந்து விட்டேன். தூங்கினேனா... கனவா...நினைவலைகளா... என ஒன்றுன் தெரியவில்லை. சிறுவயது முதற்கொண்டு நான் கடந்து வந்த நினைவுப் பாதைகளில் ஒரு வேகமான பயணம் போன்று அது காணப்பட்டது. 10 நிமிடங்களில் விழித்துக் கொண்டேன்.

கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்... கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் என்ற தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல்வரிகள் நினைவில் வர, இவைகளை எழுத்துவடிவில் அவ்வப்போது வடித்துவிடுவது என முடிவு செய்து உடனே இந்த பிளாக்-கை ஆரம்பித்து இந்த ஆரம்ப வரிகளை பதிவிட்டேன். இது ஒரு ஆரம்பமே... வரும் நாட்களில் இது வளரும்!